சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவரை திருப்பி அனுப்ப உதவுபவர்களுக்கு ஒரு மாதம் இலவசமாக பீர் வழங்கப்படும் என்று ஒரு மதுபானக்கடை அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இடஹோ மாகாணத்தில் ஈகிள் நகரில் ஓல்டு ஸ்டேட் சலூன் என்ற மதுபானக்கடை உள்ளது. இந்த கடை அவ்வவ்போது சர்ச்சைக்குரிய சலுகைகளை அறிவிப்பது வாடிக்கையாகும். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சீரான பாலின விழிப்புணர்வு மாதம் என்று இந்த கடை அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்குக் காரணம், அந்த மாதத்தை, எல்ஜிபிடிக்யூ எனும் தன் பாலின ஈர்ப்பாளர்கள் பிரைடு மாதமாக கொண்டாடுகின்றனர்.
இந்த விளம்பரத்திற்கு தன் பாலின ஈர்ப்பாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இதே போல கொரோனா காலத்தில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளுக்கும் ஓல்டு ஸ்டேட் சலூன் மதுபானக்கடை கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது.
தற்போது அமெரிக்காவில் நடந்து வரும் வெளிநாட்டவர் குடியுரிமைக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக, இந்த மதுபானக்கடை ஒரு சலுகையை அறிவித்துள்ளது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சலுகை குறித்து ஓல்டு ஸ்டேட் சலூன் மதுபானக்கடையின் சமூக வலைதளபதிவில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” இடஹோவில் உள்ள ஒரு சட்டவிரோத குடியேறியை, ஐசிஇ எனப்படும் அமெரிக்க குடியுரிமை அதிகாரியிடம் அடையாளம் காண்பித்து, நாடு கடத்த உதவினால், அவர்களுக்கு ஓல்டு ஸ்டேட் சலுானில் ஒரு மாதம் இலவச பீர் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வைரலாகி வருகிறது.


