எஸ்ஐஆருக்கு எதிராக வருவாய்த்துறை அலுவலர்களை திமுக அரசு தான் தூண்டிவிட்டுள்ளது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை டவுனில் உள்ள மணி மண்டபத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அறிவுத் திருவிழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தி விட்டு அதற்கு எதிராகவே திமுகவினர் பேசியிருக்கிறார்கள். அத்துடன் திமுகவினர் நாட்டு மக்கள் நலனுக்காக ஒரு போதும் உச்ச நீதிமன்றம் செல்வதில்லை.
எஸ்ஐஆருக்கு எதிராக வருவாய்த்துறை அலுவலர்களை திமுகஅரசு தான் தூண்டிவிட்டுள்ளது. துப்புரவு பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகு இப்போது அவர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். திமுகவுக்காக வேலை பார்த்த பிரசாந்த் கிஷோரின் கட்சி, பிஹார் தேர்தலில் 2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. அவர்களை வைத்து வேலை பார்த்தால் என்னவாகும்? விஜய், பாஜகவுடன் கூட்டணியில் இணைவார் என சபாநாயகர் அப்பாவு பேசியிருக்கிறார். அவருடைய ஆசை நிறைவேறும்.
திமுக ஆட்சியில் சொத்து வரி உயர்ந்திருக்கிறது. சட்டம்-ஒழுங்கு சரியில்லை. பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று வருகிறது. கிராமங்கள் தோறும் கஞ்சா புழக்கத்தில் உள்ளது. திமுக அரசு அதை கண்டும் காணாமல் உள்ளது. மக்கள் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இல்லை. துணை முதலமைச்சர் உதயநிதியை முதலமைச்சராக்குவதற்காக திமுகமுயற்சி செய்து கொண்டிருக்கிறது” என்றார்.


