கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் இன்று (டிச.1) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தெற்குக் கடற்பகுதியில் உருவான டிட்வா புயலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், புதுச்சேரி மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புயல் பாதிப்பு காரணமாக கல்வி துறையிலும் பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புயல் தாக்கம் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கு இன்று (டிசம்பர் 1) பள்ளி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதை கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
டிட்வா புயல் காரணமாக தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


