
ஹரியானா மாடல் அழகி ஷீத்தல் சவுத்ரி கொலை வழக்கில் அவரது காதலனே கழுத்தை அறுத்து கொலை செய்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஹரியானாவைச் சேர்ந்த 24 வயது மாடல் அழகி ஷீத்தல் சவுத்ரி. இவர் தனது சகோதரியுடன் பானிபட் பகுதியில் வசித்து வந்தார். திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஷீத்தல் சிறு சிறு இசை ஆல்பங்களை தயாரித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஜுன் 14ம் தேதி படப்பிடிப்புக்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் ஷீத்தலின் சகோதரி பானிபட் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 16 ஆம் தேதி சோனிபட்டின் கார்கோடா பகுதிக்கு அருகிலுள்ள கால்வாயில் இருந்து ஷீத்தலின் உடல் மீட்கப்பட்டது. அவரது உடல் மற்றும் கைகளில் பச்சை குத்தப்பட்டிருந்ததை வைத்து அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டது.