மதுரையில் இருந்து அரசியல் சூறாவளி சுற்றுப்பயணத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்க உள்ளார். இந்த தொடக்க விழா கூட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
அரசியல் தலைவர்- அரசியல் பிரச்சாரம்
தற்போது, தமிழகத்தில் அடுத்தாண்டு, 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கும் விதமாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் அரசியல் பிரச்சார பயணங்களை தொடங்கி உள்ளனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அன்புமணி, திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என பலர் இருக்கிறார்கள்.
அந்த வகையில், தமிழ்நாடு பாஜக சார்பில், அக்கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் அரசியல் பிரசார பயணத்தை தொடங்கி உள்ளார்.
தமிழகம் தலைநிமிர; தமிழனின் பயணம்
‘தமிழகம் தலைநிமிர; தமிழனின் பயணம்’ என்ற பெயரில் பிரசார பயணம் மேற்கொள்கிறார்.
இதற்கான தொடக்க விழா, மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் சந்திப்பு பகுதியில் நடைபெற்றது.
இதில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பாஜக நிர்வாகங்களும்; கூட்டணி கட்சியான அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்ட நிர்வாகிகளும்; தமாகா கட்சி தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
அடுத்தக் கட்டமாக நயினார் நாகேந்திரன், ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து, பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


