சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டலில் போதையில் ஆட்டம் போட்ட இசையமைப்பாளர் மகள் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் பிரபல ஓட்டல்களில் உள்ள பப்புகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் உள்ள பப்பில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பார்ட்டி நடைபெறுவதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு போலீஸார் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.அப்போது பார்ட்டி முடிந்த சில இளைஞர்களும், இளம்பெண்களும் அதே ஓட்டல் அறைகளில் கஞ்சா புகைத்தவாறு குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். இதையடுத்து, அங்கிருந்த சென்னை மண்ணடி முகமது இர்பான் (30), அபிலாஷ் (27), மப்பா (32), அப்துல் ஹக் (34), பெருங்களத்தூர் சக்திவேல் (36), புளியந்தோப்பு ஜனார்த் (26), நம்மாழ்வார்பேட்டை கணேஷ் (32), ஏழுகிணறு இப்ராகிம் (30), பெரியமேடு முகமது சாலிக் (25), கிண்டி ஆகாஷ் (27), மந்தைவெளி தசரதராஜ் (24), சிங்கப்பூர் மகமதுபர்கான் (27), புரசைவாக்கம் வினோதன் (30), கொண்டித்தோப்பு துளசிராமன் (23), விருகம்பாக்கம் துர்கா பவானி (23), சூளைமேடு ப்ரவல்லிகா (23), திருவான்மியூர் ரெஜினா (21) மற்றும் ஓட்டல் மேலாளர் சைதாப்பேட்டை சுகுமார் (43) ஆகிய 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போது அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளியானது. பிடிபட்ட போதை கும்பல், வாட்ஸ் அப் குழு மூலம் மாதம் இருமுறை போதை விருந்தில் பங்கேற்றது தெரிய வந்தது. போலீஸார் கைது செய்த மூன்று பெண்களில் ஒருவர், 2010-ம் ஆண்டு வெளியான திகிலான தமிழ் திரைப்படத்தின் இசையமைப்பாளர் மகள் என்பது தெரிய வந்தது. பெங்களூரைச் சேர்ந்த அவர், சென்னையில் மகளிர் விடுதியில் தங்கி பணியாற்றியதும் தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து 18 பேரையும் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டது. நைட் பார்ட்டியில் இசையமைப்பாளர் மகள் பிடிபட்ட சம்பவம், தமிழ் திரையுலகினர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


