கரூர் சென்றால் விஜய் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில்,” அதிமுக கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக கொடி பறந்தது. தொண்டர்கள் ஆர்வம் மிகுதியால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். தொண்டர்கள் முதலில் ஒன்றிணைவார்கள். பிறகு மக்கள் ஒன்றிணைவார்கள். தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற ஒரே அணியில் திரளப் போகிறார்கள்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் விஜய் இன்னும் மக்களை சந்திக்கவில்லை. கரூர் சென்றால் அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. விஜய்யின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும். அதற்காகவே அவர் பாதுகாப்பு கோரியுள்ளார். இந்த விவகாரத்தில் திமுக அரசு தனது பொறுப்பை தட்டிக் கழித்து வருகிறது.
திமுக தலைமையிலான கூட்டணி மக்கள் ஆதரவை இழந்துவிட்டது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. சொத்து வரி மற்றும் மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அனைத்து தரப்பினரும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த விடியாத அரசு 2026 தேர்தலில் மக்களிடம் தகுந்த பதிலைப் பெறும்.
வருகிற அக். 12-ம் தேதி திட்டமிட்டபடி எனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் நடைபெறுகிறது. பிஹார் தேர்தலில் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் பணி செய்து வருவதால் சுற்றுப்பயணம் தொடக்க விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்றார்.


