ஏடன் வளைகுடாவில் டச்சு சரக்குக் கப்பல் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அந்த கப்பல் தீப்பிடித்து மிதந்து கொண்டிருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய கடல்சார் பணிக்குழு தெரிவித்துள்ளது
ஏடன் வளைகுடாவில் டச்சு நாட்டுக் கொடியுடன் வந்து கொண்டிருந்த எம்.வி.மினர்வாகிராட்ச் சரக்கு கப்பல் அடையாளம் தெரியாத வெடிபொருள் மீது மோதியது. இதில் கப்பல் தீப்பிடித்தது. ஏமனின் ஏடன் துறைமுகத்திலிருந்து தென்கிழக்கே கப்பல் சுமார் 128 கடல் மைல் தொலைவில் இருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது கப்பலில் இருந்த ரஷ்யா, உக்ரைன், பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 19 பணியாளர்களுக்கும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். அவர்களில் 18 பேர் ஐரோப்பிய ஒன்றியத்தில் கடற்படை கப்பல்களில் உள்ளதாக ஆஸ்பைட்ஸ் பணிக்குழு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்த ஒருவர், மருத்துவ சிகிச்சைக்காக அருகில் உள்ள கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளான எம்.வி.மினர்வாகிராட்ச் கப்பல் தற்போது தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆஸ்பைட்ஸ் ராணுவ கடல்சார் பணிக்குழு தெரிவித்துள்ளது. செங்கடல் பிராந்தியத்தில் ஹூதி தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த ஐரோப்பிய ஒன்றியப் பணிக்குழு நிறுவப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு மாலுமிகள் காயமடைந்துள்ளனர்.
ஏடன் வளைகுடாவில் உள்ள இந்த டச்சு சரக்குக் கப்பல் மீது வெடிகுண்டு சாதனத்தைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் ஹூதி அமைப்பினர் தானா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. அவர்கள் 2023-ம் ஆண்டு முதல் செங்கடல் பகுதி கப்பல்கள் மீது ஏராளமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். தற்போது தாக்குதலுக்கு உள்ளான கப்பல் தீப்பிடித்து எரிவதால் கடல் போக்குவரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தடையாக உள்ளது. எனவே, அப்பகுதியில் உள்ள அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம் என்று ஆஸ்பைட்ஸ் பணிக்குழு எச்சரித்துள்ளது.
இந்தத் தாக்குதலை ஹூதி அமைப்பினர் உரிமை கோரினால், செப்டம்பர் 1-ம் தேதி சவுதி அரேபியாவின் செங்கடல் துறைமுக நகரமான யன்பு அருகே இஸ்ரேலிய உரிமையாளருக்குச் சொந்தமான ஸ்கார்லெட் ரே என்ற டேங்கர் கப்பலைத் தாக்கிய பின்னர், வர்த்தகக் கப்பல் மீது ஹூதி அமைப்பு நடத்தும் முதல் தாக்குதலாக இது இருக்கும் என்று ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது.


