
ரஷ்யாவில் உள்ள கம்சட்கா தீபகற்பகத்திற்கு அருகே இன்று அதிகாலை 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் கிழக்கில் உள்ள கம்சட்கா தீபகற்பம் மிகத் தீவிர நிலநடுக்க மண்டலத்தில் அமைந்துள்ளது. அங்கு 1952-ம் ஆண்டு ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், இதுவரை பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கங்களிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகும். இங்கு இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.4 ரிக்டர் அளவில் பதிவானது. இதையடுத்து அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 39.5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் இந்த நிலநடுக்கம் 7.1 ரிக்டர் அளவில் இருந்ததாக பதிவு செய்துள்ளது. கம்சட்காவில் சில பகுதிகளில் 4 மீட்டர் உயரம் வரை அலைகள் எழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் செவெரோ, குரில்ஸ்க் உள்ளிட்ட கடலோர நகரங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். கம்சட்காவுக்கு தென்மேற்கில் அமைந்துள்ள ஜப்பானுக்கு இதுவரை எந்த சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
இதே பகுதியில் கடந்த ஜூலை மாதத்தில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. அப்போது ஜப்பான், அமெரிக்கா மற்றும் பசிபிக் தீவு நாடுகளான ஹவாய், சிலி, கோஸ்டாரிகா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.