
இஸ்ரேல், பாலஸ்தீனத்தை தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஐ.நா. பொதுச்சபையில் இந்தியா வாக்களித்துள்ளது.
பாலஸ்தீன விவகாரத்துக்கு அமைதியான முறையில் தீர்வு கொண்டு இஸ்ரேலையும், பாலஸ்தீனத்தையும் தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்கும் நியூயார்க் பிரகனத்தை ஆதரித்து கொண்டு வரப்பட்ட தீர்மானம் மீது ஐ.நா பொதுச்சபையில் நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. காஸா போரை முடிவுக்குக் கொண்டுவரவும், அமைதியான, நீடித்த தீர்வை எட்டவும் கூட்டு நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரான்ஸ் அறிமுகம் செய்த இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்பட 142 நாடுகளும், எதிராக 10 நாடுகளும் வாக்களித்தன. 12 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. தீர்மானத்துக்கு எதிராக அமெரிக்கா, அர்ஜென்டினா, ஹங்கேரி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் வாக்களித்துள்ளன.
முந்தைய தீர்மானங்களில் வாக்களிப்பதை தவிர்த்து வந்த இந்தியா, இந்த நியூயார்க் தீர்மானத்தில், பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக மாற்றுவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான போக்கை கடைபிடித்து வந்தது. இந்த நிலையில் தற்போது பாலஸ்தீன சுதந்திரத்திற்கு வாக்களித்து இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இந்தத் தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்த, இஸ்ரேலிய தூதுவர் டேனி டேனனால் வெற்று சைகை என்றும், எதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட அரசியல் சர்க்கஸ் என்றும்
கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், இந்தத் தீர்மானம் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதுடன், ஹமாஸ் அமைப்பை பலவீனப்படுத்தாமல், அதற்கு வெகுமதி அளிக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த தீர்மானம் அர்த்தமற்ற அரசியல் தந்திரம் என்றும், இது அமைதி முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. இந்தத் தீர்மானம் அக்டோபர் 7 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு அவமதிப்பு என்றும், இது ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இருப்பதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.