
தென்னிந்திய பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று (செப்.8) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. ராணிப்பேட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்த நிலையில், இன்று தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கான வாய்ப்புள்ளது; தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 13-ம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும் எனவும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.