
அதிமுக ஒருங்கிணைப்புக்கு தேவைப்பட்டால் நாங்கள் பேசவும் தயாராக உள்ளோம் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இதனால் ஈரோடு பகுதியில் அதிமுக பிரசாரத்தை எடப்பாடி பழனிசாமி தவிர்ந்து வந்தார். கடந்த 1-ம் தேதி கோபி அருகே நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செங்கோட்டையன், தனது முடிவை செப்.5-ம் தேதி (இன்று) அறிவிப்பேன் என்று கூறியிருந்தார்.
அதன்படி, கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள புறநகர் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் செங்கோட்டையன் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் குவிந்தனர். அவர்களிடம் அவர் ஆலோசனை நடத்தினார். இதன்பின் அவர்செய்தியாளர்களிடம் கூறுகையில் அதிமுகவை ஒன்றிணைக்கவும், வெளியே சென்றவர்களை மீண்டும் இணைக்கவும் கோரிக்கை வைத்தோம். வெளியே சென்றவர்கள், எந்த நிபந்தனையும் இல்லை எங்களை கட்சியில் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறார்கள்.
ஆனால், இந்த கருத்தை எடப்பாடி பழனிசாமிஏற்க மறுக்கிறார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், ஒருங்கிணைப்பு பணிகளை நாங்களே மேற்கொள்வோம். பிரிந்தவர்களை இணைத்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெறும் என்று கூறினார். செங்கோட்டையன் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நெல்லையில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், அதிமுகவை ஒருங்கிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. ஆனால், அதிமுக ஒருங்கிணைப்புக்கு தேவைப்பட்டால் நாங்கள் பேசவும் தயாராக உள்ளோம். அனைவரும் ஓரணியில் இணைவது நிச்சயம் நடக்கும். கடைசி ஒரு மாதத்தில் கூட நடக்கும். அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் திமுக ஆட்சியை நிச்சயம் அகற்றலாம் என்று கூறினார்.