
இங்கிலாந்து சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் இங்கிலாந்து வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். மேலும் முதல்வருடன் அவர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். அதன்படி, தமிழகத்தில் முதலீடு செய்வதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வருகிறார்.
அவ்வகையில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான `தமிழ்நாடு ரைசிங் ஐரோப்பா’ முதலீட்டு இயக்கத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனியில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3,819 கோடி மதிப்பிலான 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டில் 9,070 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இதன்மூலம், ஜெர்மனியில் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் கையெழுத்திடப்பட்ட மொத்த முதலீடுகள் ரூ.7,020 கோடியாக உயர்ந்து, 15 ஆயிரத்து 320 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து சென்றடைந்தார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு இங்கிலாந்து வாழ் தமிழர்கள் உற்சாகமாக வரவேற்றனர். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இங்கிலாந்தில் கால் வைத்ததும் தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன், கடல் கடந்த இந்த பயணத்தில் வீட்டின் நறுமணத்தை பெற்றேன். உற்சாக வரவேற்பால் உள்ளம் மகிழ்ந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.