
திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 180 பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவுக்கு 180 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று (செப்டம்பர் 3) காலை புறப்பட்டது. ஆனால் விமானம் புறப்பட தயாரான நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரனமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது.
இதனால் 180-க்கும் மேற்பட்ட பயணிகள் விமானத்துக்குள்ளேயே 2 மணிநேரமாக அமர்ந்திருந்தனர். ஆனாலும், விமானத்தின் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படவில்லை. இதனால் விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று பகல் 1 மணிக்கு மாற்று விமானம் மூலம் அவர்கள் அனைவரும் சார்ஜாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக விமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் திருச்சி விமானம் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.