
நயாகரா நீர்வீழ்ச்சியை ரசித்து விட்டு நியூயார்க் திரும்பிக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் பேருந்து கவிழ்ந்து 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்கா. கனடா எல்லையில் உள்ள உயரமான நயாகரா நீர்வீழ்ச்சியின் அழகைக் காண உலகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். அப்படி நயாகரா நீர்வீழ்ச்சியை கண்டு ரசிப்பதற்காக சீனா, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 51 சுற்றுலா பயணிகள் நேற்று சென்றார்.
நயாகரா நீர்வீழ்ச்சியைக் கண்டு ரசித்து விட்டு அவர்கள், பேருந்தில் நியூயார்க் நகரத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பஃபலோவில் இருந்து கிழக்கே 40 கிலோ மீட்டரில் பேருந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 5 சுற்றுலா பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த போலீஸார், மீட்புப்படையினருடன் சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பேருந்தில் இருப்பவர்களை மீட்க எட்டு ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன. அதில் இருந்தவர்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுற்றுலா பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்துள்ளது என்று நியூயார்க் மாநில காவல்துறை தளபதி மேஜர் ஆண்ட்ரே ரே கூறினார். மேலும் விபத்தில் யார் உயிருக்கும் ஆபத்து இல்லை என்று கூறிய அவர், சில பயணிகள் மருத்துவச் சிகிச்சைக்குப் பின் இருப்பிடம் திரும்பி விட்டனர் என்றார். ஐந்து பேர் உயிரிழந்ததற்கு நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சல் தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.