
திருநெல்வேலிக்கு (நெல்லை) இன்று வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக திமுகவினர் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பாஜக. சார்பில் முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமித்ஷா நெல்லை வருகிறார். கேரளா மாநிலம் கொச்சியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மதியம் 2.50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார்.
அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு அமித்ஷா வருகிறார். அங்கிருந்து பெருமாள்புரம் என்ஜிஓ காலனியில் உள்ள பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு காரில் புறப்பட்டு செல்கிறார். அங்கு தேநீர் விருந்தில் பங்கேற்றுவிட்டு மீண்டும் கார் மூலம் சாலை மார்க்கமாக வண்ணார்பேட்டை, வடக்கு புறவழிச்சாலை வழியாக பூத் கமிட்டி பொறுப்பாளர் மாநாடு நடைபெறும் விழா மேடைக்கு 3.20 மணிக்கு வருகிறார். இந்த மாநாட்டில் அமித்ஷா சிறப்புரையாற்றுகிறார். அமித்ஷாவின் நெல்லை வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நெல்லை மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் திருநெல்வேலி மாநகரம் முழுவதும் அமித்ஷாவுக்கு எதிராக திமுகவினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒடிசாவை ஒரு தமிழர் ஆளலாமா? ஒடியா பேசக்கூடியவர்கள் தான் ஆள வேண்டும் என்று ஒடிசா தேர்தல் பரப்புரையின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய பேச்சு குறித்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.