
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் மனைவியும், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவின் தாயாருமான ரேணுகாதேவி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஒரு மாதமாக தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று காலை ரேணுகாதேவி உயிர் பிரிந்தது. சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் ரேணுகாதேவியின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும், அவரது மறைவு குறித்து முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் துணைவியாரும், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி பாலு மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். கணவரும் மகனும் பொதுவாழ்க்கையில் ஈடுபட உறுதுணையாக இருந்து, தமது அன்பாலும் அரவணைப்பாலும் அவர்களது பணிகளுக்கு ஊக்கமளித்து, அமைதியாக அவர்களது வெற்றியின் பின்னணியாக இயங்கியவர் ரேணுகாதேவி பாலு. அத்தகைய பெருந்துணையின் மறைவு எவராலும் ஈடுசெய்யவியலாத பேரிழப்பு.
அன்னாரை இழந்து தவிக்கும் நண்பர் டி.ஆர்.பாலு, தம்பி டி.ஆர்.பி. ராஜா ஆகியோருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.