இளையராஜா, வைரமுத்து பிரிவுக்கு யார் காரணம் என்று இயக்குநர் கங்கை அமரன் கூறியுள்ளார்.
வீர அன்பரசு இயக்கி, நடித்துள்ள படம் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’. இதன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், ஹேராம் படத்தில் புதுவிதமான பாட்டு உருவாக நான் தான் காரணம். ஆனால் இதை இளையராஜாவோ கமல்ஹாசனோ எந்த மேடையிலும் சொல்லவில்லை. எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். இந்த வயதிலும் ரஜினிகாந்த் நடிக்கும் போது அவர் வயதை ஒட்டிய நானும் ஏன் இசையமைக்க கூடாது. நான் இசையமைக்க தயாராக இருக்கிறேன்.
இளையராஜா 10 வருடங்களாக என்னை ஒதுக்கி வைத்திருந்தார். அதைப் பயன்படுத்திக் கொண்டு, வைரமுத்து இளையராஜாவிடம் பாட்டு எழுதி வளர்ந்தார். அந்த காலக்கட்டத்தில் கல்லூரி விழாக்களில் பல இடங்களில் கவிஞர் வைரமுத்து பேசும் போது, இளையராஜா வளர்ந்து வருவதற்கு நானே காரணம். என் பாடலே காரணம் என்று கூறினார்.
இப்படியான பேச்சைக் கேள்விபட்டு இளையராஜாவிடம் நான் சொன்ன போது, அவர் நம்பவில்லை. ஆதாரப்பூர்வமாக அவர் அதை அறிந்த பிறகு தான், இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் விரிசல் ஏற்பட்டது. இவர்கள் இருவருக்கும் விரிசலுக்கு முக்கிய காரணம், இளையராஜா என்னால் தான் வளர்கிறார் என்று வெளி மேடைகளில் வைரமுத்து பேசியது தான் என்று கூறினார். இவ்விழாவில் பிரிதிவிராஜ், புதுப்பட்டு சக்திவேல், வாழை ஜானகி, கதாநாயகி ஏஞ்சல், ஸ்ரீதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


