
மத்தியப்பிரேதேசத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 9 நோயாளிகளை செவிலியர்கள் காப்பாற்றியுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் டாமோவில் மாவட்ட மருத்துவமனை உள்ளது. இங்குள்ள மூன்றாவது மாடியில் பொது வார்டு உள்ளது. நேற்று மாலை திடீரென இந்த வார்டில் இருந்து புகை வந்துள்ளது. அப்போது மின்சார வயரில் தீப்பிடித்து வார்டு முழுவதும் பற்றிக் கொண்டது. இதனால் நோயாளிகள் உயிர் பயத்தில் அலறினர். அங்கிருந்த செவிலியர்கள் தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைத்ததுடன், 9 நோயாளிகளை அங்கிருந்து பாதுகாப்பாக வேறு வார்டுக்கு கொண்டு சென்றனர்.
ஒரு நோயளியின் உறவினர் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது ஷார்ட் சக்யூட் ஏற்பட்டதால் இந்த தீ விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. நர்சிங் ஊழியர்களிடமிருந்து தகவல் கிடைத்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுகாதார அதிகாரி முகேஷ் ஜெயின் தெரிவித்தார். தீயை அணைத்தபிறகு அனைத்து நோயாளிகளும் மீண்டும் வார்டுக்கு மாற்றப்பட்டனர். இந்த சம்பவத்தால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. உடனடியாக பழுதடைந்த மின்சாரப் பலகை புதிதாக மாற்றப்பட்டுள்ளதாக முகேஷ் தெரிவித்தார். தங்கள் உயிர்களைக் காப்பாற்றிய செவிலியர்களுக்கு நோயாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.