
அதிமுகவின் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய ஸ்விட்ச் போர்டாக டெல்லி இருக்கிறது என்று மைத்ரேயன் கூறியுள்ளார்.
சென்னையின் பிரபல புற்றுநோய் நிபுணரான மைத்ரேயன் கடந்த 1991-ல் பாஜகவில் இணைந்து, மாநில செயற்குழு உறுப்பினர், மாநில அறிஞர் அணி தலைவர், பொதுச் செயலாளர், மாநில துணைத் தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்தார். பின்னர், 1999 -ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அவர், 2002-ம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், முதலில் ஓபிஎஸ் அணியிலும், பிறகு இபிஎஸ் அணியிலும் இருந்து வந்தார். ஓபிஎஸ்ஸை சந்தித்ததால், கடந்த 2022-ல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து, கடந்த ஜூன்9-ம் தேதி மீண்டும் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக மைத்ரேயன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் திடீரென பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் மீண்டும் இணைந்தார். அவருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மைத்ரேயன் திமுகவில் இன்று சேர்ந்தார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
இதன்பின் மைத்ரேயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” மண், மொழி, மானம் காக்க ஓரணியில் என்ற தளபதியின் ஆணைக்கினங்க இன்றைக்கு தளபதி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் என்னை திமுகவில் இணைத்துக் கொண்டேன். தளபதியின் சிப்பாய்களில் ஒருவராக இணைந்துக் கொள்ள விரும்பி திமுகவில் இணைந்துள்ளேன். மு.க.ஸ்டாலின் தலைமையில் மிகப்பெரிய முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது. கல்வி, சமுதாய முன்னேற்றம், தனிநபர் வருமானம், பொருளாதார வளர்ச்சி என அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னனி மாநிலமாக இருக்கிறது.
சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றுதான். இரண்டாவது இடத்திற்குதான் போட்டி நடக்கும். நாளை மறுநாள் கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி வைக்க உள்ளார். அதைபோல அடுத்த ஆண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் தேசியக்கொடி ஏற்றி வைக்க உள்ளார்.
அதிமுகவின் தற்போதைய போக்கு சரியாக இல்லை. அதிமுக,பாஜக கூட்டணி அறிவிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி அறிவிக்காமல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிக்கிறார். அமித்ஷா கூட்டணி ஆட்சி என்கிறார். ஆனால், இபிஎஸ் கூட்டணி ஆட்சி இல்லை என்கிறார். அதிமுகவின் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய ஸ்விட்ச் போர்டாக டெல்லி இருக்கிறது. அது என்ன சொல்கிறதோ, அதற்குக் கட்டுப்படுபவர்களாகத்தான் அதிமுக தலைமை இருக்கிறது. அதிமுக,பாஜக கூட்டணியில் குழப்பம் நிலவி வருகிறது. எனக்கு அமைப்புச் செயலாளர் பதவியை கொடுத்தார்கள். ஆனால் என்னை பயன்படுத்திக்கொள்ளவில்லை; இதனாலே திமுகவில் இணைந்துள்ளேன்” என்றார்.