
இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உடல்நிலை எப்படியிருக்கிறது? அவர் எங்கே இருக்கிறார் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சிவசேனா உத்தவ் அணியின் எம்.பி சஞ்சய் ராவத் எழுதியுள்ள கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 22-ம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல்நலனைக் காரணம் காட்டி ராஜினாமா செய்ததாக ஜெகதீப் தன்கர் கூறியிருந்தார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே துணை ஜனாதிபதி திடீரென ராஜினாமா செய்தது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின் ஜெகதீப் தன்கர் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சிவசேனா உத்தவ் அணியின் எம்.பி சஞ்சய் ராவத் கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் எங்கே இருக்கிறார் என்று தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காத காரணத்தால் இந்த கடிதத்தை எழுதியுள்ளதாக சஞ்சய் ராவத் கூறியிருந்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தை, சஞ்சய் ராவத் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த கடிதத்தில்,” ஜெகதீப் தன்கர் அவருடைய இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் பாதுகாப்பாக இல்லை என்றும் டெல்லியில் வதந்திகள் பரவி வருகின்றன.அவருடனோ அல்லது அவரது ஊழியர்களுடனோ எந்த தொடர்பும் இல்லை, இது மிகவும் கவலைக்குரிய விஷயம். முன்னாள் துணை ஜனாதிபதிக்கு என்ன நடந்தது? அவர் எங்கே? அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது? அவர் பாதுகாப்பாக இருக்கிறாரா? இந்தக் கேள்விகள் பற்றிய உண்மையை நாடு அறிய உரிமை பெற்றிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.