
உத்தராகண்ட் மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கு, அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள சாமோலி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் ஆகஸ்ட் 5-ம் தேதி மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் கீர் கங்கா நதியில் திடீரென பெருவெள்ளம் ஏற்பட்டு தரளி கிராமத்தை நோக்கி சீறிப் பாய்ந்தது. தரளியில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் ராணுவம், ஐடிபிபி, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவை இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டன. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் மாயமாயினர்.
இந்த இயற்கை சீற்றத்தால், சாமோலி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை முழுமையாக இழந்த குடும்பங்களுக்கு உடனடியாக இந்த நிதி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க, ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு அவசர மருத்துவ உதவியும், வீடுகளை இழந்தவர்களுக்கு தற்காலிக முகாம்களில் தங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த மேக வெடிப்பால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணிகளும் தொடங்கியுள்ளன. அரசு தரப்பில் தேவையான அனைத்து உதவிகளும் விரைந்து வழங்கப்படும் என முதலமைச்சர்புஷ்கர் சிங் தாமி உறுதியளித்துள்ளார்.