
பிரபல தனியார் மருத்துவமனையின் குளியலறையில் நர்ஸ் இறந்த நிலையில் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரின் சந்திரசேகர் பகுதியில் பிரபலமான தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த சோனாலி ரவுத் என்ற நர்ஸ் வேலை செய்து வந்தார். நேற்று இரவு அவர் பணியில் இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை மருத்துவமனை குளியலறையில் இறந்த நிலையில் சோனாலி கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், சோனாலி ரவுத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் நடத்திய விசாரணையில் நேற்று இரவு 10 மணியளவில் தனது குடும்பத்தினருடன் சோனாலி தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது.
நர்ஸ் சோனாலி ரவுத் அகால மரணத்திற்குப் பின் இருக்கும் உண்மையை வெளிக்கொணர அனைத்து கோணங்களிலும் ஆராயப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர். சோனாலி தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பிரபல மருத்துவமனையில் நர்ஸ் மர்மமான முறையில் இறந்த சம்பவம் புவனேஸ்வரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.