
உத்தரப்பிரதேசத்தில் போலியாக சர்வதேச போலீஸ் நிலையம் அமைத்து பணம் பறித்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் போலி தூதரகம் நடத்தி வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகவும், வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தி தருவதாகவும் ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்பவரை காசியாபாத் போலீஸார் கடந்த மாதம் கைது செய்திருந்தனர். இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் மோசடி கும்பல் ஒன்று, சர்வதேச காவல் நிலையம் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை அலுவலகம் நடத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவின் செக்டார் 70-ல் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் இருப்பதாக கவுதம புத்த நகர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. அங்கு போலீஸார் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த 6 பேரை பிடித்து விசாரித்த போது, போலியாக சர்வதேச காவல் நிலையம் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை அலுவலகத்தை அவர்கள் நடத்தியதை அறிந்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
காவல் துறை அதிகாரிகள் போல நடித்தும், போலி ஆவணங்கள், போலி அடையாள அட்டைக, போலி பேட்ஜ், உடை ஆகியவற்றை பயன்படுத்தி அவர்கள் 6 பேரும் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்கள் பொதுமக்களிடமிருந்து www.intlpcrib.in என்ற இணையதளத்தின் மூலம் பணத்தை பெற்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்தச் சோதனையில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் என்று டி.சி.பி அவஸ்தி கூறியுள்ளார். இந்த மோசடியில் வேறு யாரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்று விசாரித்து வருகிறோம் என்று அவர் கூறினார். போலி காவல் நிலையம் நடத்தி பொதுமக்களிடம் மோசடி கும்பல் பணம் பறித்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.