
சாத்தூர் அருகே சட்டவிரோதமாக இயங்கிய பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் பொன்னுபாண்டியன் . இவருக்குச் சொந்தமான வீட்டில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று திடீரென ஏற்பட்ட மின்சார உராய்வின் காரணமாக பட்டாசுகள் வெடித்து சிதறியது.
இந்த வெடி விபத்தில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த கீழகோதை நாச்சியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (21), விஜயகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி (70), சண்முகத்தாய் (60) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் 90 சதவீத தீக்காயங்களுடன் மாரியம்மாள் என்பவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதாக பொன்னுபாண்டியான் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.