
வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு மெகா கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வருவோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பாமக தலைவராக அன்புமணி மேலும் ஓராண்டு தொடர்வார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பொதுச்செயலாளராக வடிவேலு ராவணன், பொருளாளராக திலகபாமா தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், என் மீது நம்பிக்கை வைத்து ஓராண்டு காலம் பொறுப்பில் நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி. பொறுப்புகள் பதவிகளை எதிர்பார்ப்பவன் நான் அல்ல என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். என் மீது நம்பிக்கை வைத்து வந்துள்ளீர்கள். அந்த நம்பிக்கை வீண் போகாது.
திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே பாமகவின் முக்கிய நோக்கமாக உள்ளது. 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு தொண்டர்கள் விருப்பப்படியும், தமிழ்நாட்டின் நலனுக்கு ஏற்ப மெகா கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வருவோம். இந்தக் கூட்டணி தேர்தலுக்கானது மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கானது. மக்கள் நலன், இளைஞர்களின் எதிர்காலம், சமூக நீதி ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி இந்தக் கூட்டணி செயல்படும் என்று கூறினார்.
பாஜக கூட்டணியில் சேர பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விரும்பும் நிலையில் அதற்கு பாமக நிறுவனர்டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மெகா கூட்டணியை அமைத்து ஆட்சிக்கு வருவோம் என்று கூறியுள்ளது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பாமக தலைமையில் தனி அணி அமைய உள்ளதா அல்லது வேறு கூட்டணியில் பாமக சேரப்போகிறதா என்ற குழப்பம் தான் அவர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால், ஆட்சிக்கு வருவோம் என்றால் பாமக தலைமையில் தனி அணி வரும் தேர்தலில் மோதும் என்று அன்புமணி கூறுகிறாரா என்ற குழப்பத்தில் பாமக தொண்டர்கள் உள்ளனர்.