திமுகவில் சமீபத்தில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவிற்கு இலக்கிய அணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதிமுவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜா, பாஜகவை ஆரம்ப முதலே கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டார். அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகிய பின் மீண்டும் அதிமுகவில் அன்வர் ராஜா சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆனாலும், பாஜக மீதான விமர்சனத்தை அவர் கைவிடவில்லை.
இந்த நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி சேர்ந்ததை கடுமையாக விமர்சனம் செய்த அன்வர்ராஜா, கடந்த ஜூலை 21-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார். இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார்.
இந்த நிலையில், திமுக சட்ட திட்ட விதி 31, பிரிவு 10-ன்படி தி.மு.க. இலக்கிய அணி தலைவராக முன்னாள் அமைச்சர் அ. அன்வர்ராஜா தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். புலவர் இந்திரகுமாரி வகித்து வந்த தி.மு.க. இலக்கிய அணி தலைவர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் அ. அன்வர்ராஜா நியமிக்கப்படுகிறார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


