
நம் நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. நமது குரல் திருடப்பட்டுள்ளது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நேற்று நடத்தினார். அப்போது பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மகா தேவ்புரா சட்டப்பேரவை தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். என்று ராகுல் காந்தி பகீர் தகவலை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸ் நடத்திய ஆய்வில் சரியாக 1 லட்சத்து 250 போலி வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 11,965 வாக்காளர்கள் பெயர்கள் இரண்டு முறை பதிவாகியுள்ளன. மேலும் 40,009 வாக்காளர்களின் முகவரி போலியாக உள்ளது. 10,452 வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட முகவரியில் மொத்தமாக பதிவு செய்துள்ளனர். . மேலும் 4,132 பொருத்தம் இல்லாத புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. கர்நாடகா மாநிலம், பெங்களூரு மக்களவைத் தொகுதியில் 1 லட்சத்து 250 வாக்குகள் திருடப்பட்டுள்ளன. இதே போன்று ஒவ்வொரு தொகுதியிலும் நடந்திருந்தால் நாடு முழுவதும் என்ன நடக்கிறது என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
நாட்டிலுள்ள இளைஞர்களின் வாக்குகள் திருடப்படுகின்றன. வாக்குகளைத் திருடியது யார் என்பது உங்களுக்கு தெரியும். இதற்கு முன் எங்களிடம் ஆதாரம் இல்லை. ஆனால், இப்போது எங்களிடம் 100 சதவீத ஆதாரம் உள்ளது. அதற்கான தரவுகள் அனைத்தும் கிடைத்துள்ளன என ராகுல் காந்தி அளித்த சிறப்பு செய்தியாளர் சந்திப்பு இந்திய அளவில் பேசுபொருளாக மாறியது. இதையடுத்து தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி, வாக்குத்திருட்டு, .#Vote chori போன்ற தலைப்புகள் இந்திய அளவில் டிரெண்டாகியது.
இந்த நிலையில் மக்களவை எதிர்கட்சி தலைவர், ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பு குறித்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் பகிர்ந்துள்ளார். மேலும், அதில், “ஒவ்வொரு தேசபக்தரான இந்தியரும் இதை பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நமது நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. நமது குரல் திருடப்பட்டுள்ளது. இது மிக தீவிர குற்றச் செயல். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இவற்றை ஆதாரத்துடன் முன் வைத்துள்ளார். முதன்முறை என்ற போதிலும் இம்முறை பிரதமராகிய நீங்கள் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளிப்பீர்களா? நாடு தெரிந்து கொள்ள விரும்புகிறது”என்று பதிவிட்டுள்ளார்.