
தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி சென்னையில் தனது வீட்டின் அருகே ஒரு கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். மேலும் இவர்களில் 26 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இந்நிலையில், குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி இந்த வழக்கில் கைதான நாகேந்திரன் உள்ளிட்ட 17 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் நடைபெற்றது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன் மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆகியோர், சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை கருத்தில்கொண்டு 26 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கைது செய்யப்பட்டதற்கும், குண்டர் சட்டத்தில் அடைப்பதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கும் இடையேயான கால தாமதத்தை கருத்தில் கொண்டு குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும், மனதை செலுத்தாமல் இயந்திர தனமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.