
நெல்லை கவின் கொலையைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக புதிய தமிழகம் கட்சி இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் கவின்குமார் (24). இவர் சென்னையில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தனது தோழியைப் பார்ப்பதற்காக கடந்த 27.7.2025ம் தேதி பாளையங்கோட்டைக்கு வந்துள்ளார். இதையறிந்த அந்த பெண்ணின் சகோதரரான சுர்ஜித் அரிவாளால் கவினை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆணவக்கொலையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதே போல, கவின் படுகொலையை கண்டித்து திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
அப்போது குறிப்பிட்ட ஒரு சமூதாயம் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவரை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசுதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் ஷியாம் கிருஷ்ணசாமி மீது திருநெல்வேலி சந்திப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.