
தைலாபுரம் இல்லத்தில் உள்ள தொலைபேசி,வைஃபை மற்றும் சிசிடிவி ஆகியவை ஹேக் செய்யப்பட்டுள்ளதாக டிஎஸ்பி அலுவலகத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புகார் செய்துள்ளார்.
தமிழ் நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாமகவில் டாக்டர் ராமதாஸ்க்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸ்க்கும் இடையே உட்கட்சி பூசல் வெடித்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தைலாபுரம் இல்லத்தில் டாக்டர் ராமதாஸ் இருக்கையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஓட்டு கேட்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஒட்டு கேட்டும் கருவியை டாக்டர் அன்புமணி தான் வைத்தார் என்று ராமதாஸ் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து அவர் விழுப்புரம் சைபர் கிரைம் மற்றும் கிளியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் விழுப்புரம் சைபர் க்ரைம் போலீசார் மற்றும் கிளியனூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஒட்டு கேட்கும் கருவி யார் வைத்தது என தனியார் புலனாய்வு நிறுவனத்துடன் பாமகவினர் புலன் விசாரணை நடத்தி வந்தனர். அதன் அடிப்படையில் மேலும் ஏதேனும் வீட்டில் உள்ளதா என புலனாய்வு செய்தனர். அப்போது போது டாக்டர் ராமதாஸ் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள வைஃபை, சிசிடிவி மற்றும் தொலைபேசி ஆகியவை ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தனியார் நிறுவனம் தெரிவித்தது. இதுதொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதன் கோட்டகுப்பம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.