நாடாளுமன்றத்தில் நூறு நாள் வேலை திட்ட புதிய மசோதா நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி பெயரை நீக்கிவிட்டு விக்சித் பாரத் ரோஜ்கர் அஜீவிகா மிஷன்’ (கிராமின்) என மத்திய அரசு பெயர் சூட்டியுள்ளது. மேலும் இத்திட்டத்துக்கு மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதி சுமையை ஏற்படுத்தியுள்ளது மத்திய அரசு. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக மசோதா நகல்களை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கிழித்து எறிந்தனர்.
இதனிடையே மத்திய அரசின் இந்த மசோதா நிறைவேற்றத்துக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, சிபிஎம்., ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் நேற்று நள்ளிரவு முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொட்டும் பனியிலும் வாட்டி வதைத்த குளிரிலும் நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய போராட்டம் நடத்தினர். எனினும், மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில்,” மக்களவையில் எதிர்க்கட்சியினர் நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. அவையில் அவர்களுக்கு போதிய கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் நடந்து கொண்ட விதம் ஏற்று கொள்ள முடியாதது” என்று கூறினார்.


