பிரேசிலில் நடைபெற்று வரும் காலநிலை உச்சி மாநாட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் அமேசான் பிராந்தியத்தில் உள்ள பெலெம் நகரில், ஐ.நா.வின் 30-வது காலநிலை குறித்த சர்வதேச மாநாடு (COP 30) நடைபெற்று வருகிறது. பருவநிலை மாற்றங்களை விவாதிப்பதற்காக ஐ.நா. சார்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் 200 நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள், பத்திரிகையாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்பட 50,000 பேர் பங்கேற்றுள்ளனர். அத்துடன் மாநாட்டில் 50 சர்வதேசத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா மாநாட்டைத் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த நிலையில், மாநாடு நடைபெற்ற அரங்கிற்குள் திடீரென தீப்பற்றிக் கொண்டது. இதனால் அங்கிருந்து தப்பியோட ஆரம்பித்தனர். அப்போது அந்த இடத்தில் இந்தியாவின் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்பட இந்தியக்குழுவைச் சேர்ந்த சுமார் 20 பேர் அங்கிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டனர். உடனடியாக தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து என்று தீயைக் கட்டுக் கொண்டு வந்துள்ளனர். தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், தீ விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பிரேசில் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், புகையை சுவாசித்ததால் 13 பேர் சிகிச்சை பெற்றதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும் மின்கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள பிரதிநிதிகள் குழு உறுப்பினர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாநாட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், விபத்துக்கான காரணம் விரைவில் கண்டறியப்படும் என அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே மாநாடு நடைபெறும் இடம் விமர்சனத்திற்கு உள்ளானது. மழை பெய்து உள் அரங்கத்தில் இருந்த பிரதிநிதிகள் மீது மழைநீர் கொட்டியுள்ளது. அத்துடன் உணவு பற்றாக்குறை குறித்த புகார்கள் எழுந்தன. மேலும் அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை சமாளிக்க குளிர்சாதன வசதி போதுமானதாக இல்லை என்றும் புகார் எழுந்தது. அத்துடன் இந்த மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பாளர்கள் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்ததால் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று, ஐ.நா.வின் காலநிலைத் தலைவர் சைமன் ஸ்டீல் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


