கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
கோவாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா, கோவாவில் நவம்பர் 20-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியத் திரைப்பட விழாக்களில் முதன்மையான இவ்விழாவில் நாட்டின் முக்கிய திரைக்கலைஞர்கள் கவுரவிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில், இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் கவுரவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால், நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த கவுரவம் வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இந்திய திரைப்பட விழாவில், மறைந்த திரைப்பட இயக்குநர்கள் குரு தத், ராஜ் கோஸ்லா, பானுமதி, ரித்விக் காதக், பூபென் ஹசாரிகா மற்றும் சலீல் சௌதரி ஆகியோரின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.
இந்த விழா இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் மற்றும் கோவா மாநில அரசு ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படுகிறது. முன்னதாக, இந்த விழாவில் 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்படுகின்றன. இவ்விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படமும் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


