திமுகவை சேர்ந்த இளம்பெண்ணை கண்டம் துண்டமாக வெட்ட வேண்டும் என்று வீடியோ வெளியிட்ட இன்ஸ்டா பிரபலம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. இவர் நடிகர் விஜய் ஆரம்பித்த தவெகவில் இணைந்து பணியாற்றி வந்தார். இந்த நிலையில், தவெகவில் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அத்துடன் தவெகவில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் வைஷ்ணவி இணைந்தார். சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படும் வைஷ்ணவி, கரூர் துயரச்சம்பவம் தொடர்பாக ஏ.ஐ வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.
இந்த வீடியோவில், கரூரில் இறந்தவர்களின் உடல்கள், சடலங்களை எடுத்துச் செல்லும் ஸ்ட்ரெச்சரில் தானாகவே விஜய்யின் இருப்பிடத்திற்கு நகர்வதைப் போலவும், விஜய் போலியாகக் கண்ணீர் விட்டு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதைப் போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்தப் பதிவு விஜய் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் கார்த்திக், வைஷ்ணவியின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், “சில பெண்களைப் பார்த்தால் கையெடுத்துக் கும்பிட வேண்டும், சில பெண்களைப் பார்த்தால் நன்றாகப் பழகத் தோன்றும், சில பெண்களைப் பார்த்தால் காதலிக்கவும் திருமணம் செய்யவும் தோன்றும், ஆனால் ஒரு சில பெண்களைப் பார்த்தால் மட்டும் தான் கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்யத் தோன்றும்” என்று பதிவு செய்திருந்தார். இந்த வீடியோவை பார்த்து பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனால் அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து கார்த்திக் நீக்கி விட்டார். ஏன் அப்படி பேசினேன் என்றும் விளக்கம் அளித்து வைஷ்ணவி புகைப்படத்துடன் மற்றொரு வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். கார்த்திக் கொலை மிரட்டல் விடுத்து பேசியிருந்த வீடியோ காட்சிகளுடன் வைஷ்ணவி, சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இத்ன் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப சட்டம், பெண்கள் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உட்பட ஆறு பிரிவுகளில் கார்த்திக் மீது சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் புதுச்சேரியில் பதுங்கியிருந்த கார்த்திக்கை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதன் பின் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


