சென்னையில் அண்ணா அறிவாலயம், நடிகர் அருண் விஜய், நடிகை குஷ்பு ஆகியோர் வீடு உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய்குமாரின் மகன் நடிகர் அருண் விஜய் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் மனைவி, மகன், மகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அவரது வீட்டில் குண்டு வைத்திருப்பதாக தமிழக காவல்துறை தலைவர் அலுவலகத்திற்கு இமெயில் வந்தது. இதையடுத்து அருண் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சென்று சோதனை நடத்தினர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் அது புரளி என்று தெரிய வந்தது.
காவல்துறை தலைவர் அலுவலகத்திற்கு வந்த மெயிலில்,” சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை, சென்னை அண்ணா அறிவாலயம், சாந்தோமில் உள்ள நடிகை குஷ்பு வீடு, மந்தை வெளியில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் வீடு, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த 7 இடங்களிலும் மோப்ப நாய்களின் உதவியுடன் போலீஸார் சோதனை செய்தனர். ஆனால், வெடிக்கும் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, இந்த மிரட்டல் புரளி என்று தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


