சேலத்தில்.2 மூதாட்டிகளை கொன்று நகை கொள்ளையடித்தவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை தூதனூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மனைவி பெரியம்மா(75). இவர் வீட்டில் ஆடு வளர்த்து வந்தார். இவற்றை தினமும் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வார். கடந்த 4-ம் தேதி வழக்கம் போல பெரியம்மா ஆடு மேய்க்கச் சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பெரியம்மாவை தேடினர். அப்போது தூதனூர் காட்டுவளவு பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் பெரியம்மா பிணமாக மிதந்தார். அவருடன் இன்னொரு பெண்ணின் உடலும் மிதந்தது. இதனால் கிராமத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், கல்குவாரியில் மிதந்த மற்றொருவர் இ காட்டூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி பாவாயி(70) என்பது தெரிய வந்தது. அவர் விவசாய கூலி வேலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் இருவரும் கல் குவாரியில் தவறி விழுந்து இறந்தார்களா, கொலை செய்யப்பட்டார்களா என போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது பெரியம்மா அணிந்திருந்த இரண்டு கம்மல், மூக்குத்தி, கால் காப்பு. பாவாயி அணிந்திருந்த கம்மல், கால் காப்பு ஆகியவை மாயமாகியிருந்தது தெரியவந்தது. இதனால் நகைக்காக அவர்கள் 2 பேரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகமடைந்தனர்.
இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், சேலத்தை அடுத்த கருப்பூர், வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்த அய்யனார்(55) என்பவருக்கு இந்த இரட்டை கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அவர் தலைமறைவானதும் தெரிய வந்தது. அவரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், இன்று காலை சங்ககிரி அருகே அய்யனார் பதுங்கியிருந்தது போலீஸாருக்கு தெரிய வந்தது.
அங்கு போலீஸார் சென்ற போது அவர் தாக்க முயன்றார். இதனால் போலீஸார், பாதுகாப்பு கருதி துப்பாக்கியால் சுட்டதில் அய்யனார் சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அஙகு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


