அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் டி.டி.வி.தினகரனின் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் இன்று (நவம்பர் 7) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில்,” ஆளும் மக்கள் விரோத திமுக அரசை பற்றி எதுவும் பேசாமல், தினந்தோறும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து டி.டி.வி.தினகரன் ஏதோ கூறி வருகிறார் அவர் என்ன கூறுகிறார் என்று நாட்டு மக்களுக்கு புரியவில்லை. ஜெயலலிதாவால் 10 ஆண்டு காலம் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கூட தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் தினகரன். என் முகத்தில் விழிக்க கூடாது என்று கூட ஜெயலலிதா உத்தரவிட்டார் அதனால் தமிழகத்திற்கு வராமல் புதுச்சேரி தோட்டத்து பங்களாவில் பதுங்கி இருந்தார்
மனோஜ் பாண்டியன் சட்ட ஞானம் கொண்டவர். அவர் திமுகவுக்கு சென்றதற்கு கூட எடப்பாடியார் தான் காரணம் என வாய் கூசாமல் தினகரன் பொய் பேசுகிறார். அவருடன் இருந்த செந்தில் பாலாஜி, பழனியப்பன், மாரியப்பன் கென்னடி, தங்க தமிழ்ச்செல்வன், உமாதேவன், உசிலம்பட்டி மகேந்திரன் உள்ளிட்ட நபர்கள் எல்லாம் ஏன் அவரை விட்டு விலகி வெளியே வந்தார்கள்? இதற்காக நேரம் ஒதுக்கி சிந்தித்தாரா என்று உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் தினகரனை கடுமையாக விமர்சித்தார். அப்போது, செந்தில் பாலாஜியை ஏன் திமுகவுக்கு அனுப்பி வைத்தீர்கள்? உங்களை நம்பி வந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று அரசியல் அனாதைகளாக இருக்கிறார்கள். உங்களை நம்பி வந்த வெற்றிவேல், மேலூர் சாமி பற்றி சிந்திக்க நேரம் இருந்ததா?
ஜெயலலிதா மறைவிற்கு பின்பு ஆட்சியையும் ,கட்சியையும் அபகரிக்க திட்டம் போட்டீர்கள்? அது நிகழாமல் போனதால் அந்த விரக்தியின் காரணமாக வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டிருக்கிறீர்கள். போயஸ் கார்டனில் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பற்றி கடிதம் இருந்தது அதை நான் கிழித்து விட்டேன் என்று தினகரன் கூறுகிறார். இப்படி ஒரு கீழ்த்தரமான சிறுமையான அரசியல் செய்து வெறும் வாயில் அவலை மெல்கிறார் அவர் மக்கள் பிரச்னைகள் சார்ந்து எதுவுமே செய்ததே இல்லை. நானும் ரவுடி தான் என்பது போல தினகரன் பரிதாபகரமான நிலைக்கு சென்று விட்டார்.
முதலமைச்சராக இருக்கும் போதே ஜெயலலிதா சிறைக்குச் சென்றதற்கு யார் காரணம்? அந்த பாவமெல்லாம் சும்மா விடாது. ஜெயலலிதாவிற்கு மருத்துவமனையில் வைத்து உரிய சிகிச்சை கொடுத்தீர்களா? அதிமுக மூன்றாம் இடத்திற்கு வந்து விடும் என்று கூறுவது ஆடு நனைகிறதே ஓநாய் அழுவது போல உள்ளது . உங்கள் மீது பெரா வழக்கு உள்ளது நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சிறைக்குச் செல்லலாம். திமுகவை எதிர்க்கும் தவெக, தேமுதிக, பாமக கட்சிகள் அதிமுகவுடன் ஒன்றாக இணைய வேண்டும்.
தை பிறந்தால் வழி பிறக்கும். எல்லா கட்சி தலைவர்களையும் போல விஜயும் தன் தொண்டர்களை உற்சாக படுத்துவதற்காக திமுக – தவெக இடையே தான் போட்டி என்கிறார். விஜய்க்காக நாங்கள் சட்டமன்றத்தில் பேசியதற்காக அவர் எங்களுக்கு நன்றி சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. நாங்கள் நல்லதை செய்து கொண்டே இருப்போம். நிச்சயமாக எடப்பாடியார் தலைமையில் மெகா கூட்டணி அமைப்போம்” என்றார்.


