பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தவெக களமிறங்கியுள்ளது. விக்ரவாண்டியை தொடர்ந்து மதுரையில் மாநாடு நடத்திய இக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய், கடந்த செப்.27-ம் தேதி கரூரில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக தவெக எந்த நிகழ்வையும் நடத்தவில்லை.
இதற்கிடையில், நேற்று முன்தினம் கரூர் நெரிசல் சம்பவத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய த.வெ.க. தலைவர் விஜய், அவர்களது குடும்பத்துக்கு ரூ.1.85 கோடி நிதி உதவி வழங்கினார். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க, 28 பேர் அடங்கிய புதிய நிர்வாகக் குழுவை நியமித்து விஜய் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து டெல்டா விவசாயிகள் பிரச்னை குறித்து தவெக தலைவர் விஜய் நேற்று அறிக்கை விட்டார். இதில் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை பனையூரில் தவெக நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், இன்று (அக்.29 ) காலை 10 மணிக்கு, பனையூர் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது. கழகத் தலைவர் விஜய்யின் ஒப்புதலோடு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


