கோவை அருகே அதிமுக பிரமுகர் மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை நடப்பதற்கு முன் அவரது வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள் முடக்கப்பட்டுள்ளதால் போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோயம்புத்தூரின் துடியலூர் அருகே தாளியூரைச் சேர்ந்தவர் கவி சரவணகுமார்(54). அதிமுக நிர்வாகியான இவர், பன்னீர்மடை ஊராட்சி தலைவராகவும், மாவட்ட கவுன்சிலராகவும் பதவி வகித்தவர் ஆவார். இவருடைய மனைவி மகேஸ்வரி(45). இந்த தம்பதியருக்கு சஞ்சய்(21) என்ற மகனும், நேத்ரா(15) என்ற மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து தனது குழந்தைகளுடன் வடவள்ளியில் மகேஸ்வரி தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று மகன் கல்லூரிக்கும், மகள் கல்லூரிக்கும் சென்ற நிலையில், மகேஸ்வரி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில், கவி சரவணகுமாரின் கார் ஓட்டுநர் சுரேஷ் , மகேஸ்வரியை கத்தியால் குத்திக்கொலை செய்ததாக கவி சரவணகுமாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரை வடவள்ளி காவல் நிலையத்தில் கவி சரவணகுமார் ஒப்படைத்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், பார்த்த போது மகேஸ்வரியின் முகம், கழுத்து ஆகியவற்றில் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்த கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் கொலை நடந்த வீட்டில் கைரேகை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், இந்த கொலையில் மர்மம் இருப்பதாக மகேஸ்வரியின் உறவினர்கள் கொலை நடந்த வீட்டை முற்றுகையிட்டனர்.
அப்போது அவர்கள், ” கொலை செய்ததாக சரணடைந்த சுரேஷ், குளித்து குங்குமப் பொட்டுடன் அமர்ந்திருந்ததாகவும், அவரது வெள்ளைச்சட்டையில்ஒரு துளி ரத்தம் கூட இல்லை” என்றும் குற்றம் சாட்டினர். மேலும், “கொலை நடக்கும் முன் மகேஸ்வரியின் வீட்டில் இருந்த அனைத்து சிசிடிவி கேமராக்களும் முடக்கப்பட்டிருந்தன. இந்த வீட்டை நன்கு அறிந்தவர் தான் இந்த கொலையை செய்திருக்கலாம்” என்றும் அவர்கள் கூறினர்.
கார் ஓட்டுநர் சுரேஷ் கொலை செய்தாரா அல்லது வேறு யாராவது செய்த கொலையின் பழியை அவர் ஏற்றுக் கொண்டாரா என்று போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, சுரேஷிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


