மொந்தா புயல் காரணமாக ஆந்திரா, புதுச்சேரியில் 67 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மொந்தா புயல் இன்று (அக்.28) மாலை அல்லது இரவு ஆந்திரா மாநிலம், மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மொந்தா புயல் காரணமாக ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பயணிகள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் என மொத்தம் 65 ரயில்கள் நாளை (அக்.29) வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி விஜயவாடா, ராஜமுந்திரி, காக்கிநாடா, விசாகப்பட்டினம் மற்றும் பீமாவரம் போன்ற கடலோரப் பகுதிகளில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வானிலை சீரானதும் நிலைமையை ஆராய்ந்து பின்னர் ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்களும் விமான சேவையை நிறுத்தியுள்ளன. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
விரைவு ரயில்கள் ரத்து
புயல் காரணமாக, புவனேஸ்வர் – புதுச்சேரி மற்றும் புதுச்சேரி – புவனேஸ்வர் சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மொந்தா புயல் காரணமாக, பயணிகளின் பாதுகாப்பு கருதி ( ரயில் எண் 20851) புவனேஸ்வரில் இருந்து இன்று (அக்.28) மதியம் 12:10 மணிக்கு புறப்படும், புவனேஸ்வர் – புதுச்சேரி சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போன்று (ரயில் எண் 20852) புதுச்சேரியில் இருந்து நாளை (அக். 29) மாலை 6.50 மணிக்கு புறப்படும் புதுச்சேரி – புவனேஸ்வர் சூப்பர் பாஸ்ட் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.


