‘பனையூரில் பதுங்கிக் கொண்ட விஜய்’ என்று நடிகர் சூரி கண்டனம் தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி குறித்து நடிகர் சூரி விளக்கம் அளித்துள்ளார்.
கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சியடைய வைத்தது. இந்த நிலையில், இச்சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து தவெக தலைவர் நடிகர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டார். 41 பேர் உயிரிழந்ததற்கு ஆறுதல் சொல்லாமல் பதுங்கியிருந்த விஜய், ஒரு வாரம் கழித்து தான் வெளியே வந்துள்ளார் என்ற விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில், தவெக தலைவர் நடிகர் விஜய்யை, நடிகர் சூரி விமர்சனம் செய்ததாக ஒரு தகவல், சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதில், ” பேரழிவோ, பெருந்துயரமோ, ஒரு அரசியல் கட்சி அன்றாடம் எப்போதும் மக்களுடன் நிற்க வேண்டும். ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சி அதன் அலுவலகத்துக்கு பூட்டு போட்டுவிட்டது. அதன் தலைவரோ பனையூரில் பதுங்கிக் கொண்டார் – நடிகர் சூரி,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இந்த பதிவை பலர் சமூக வலைதளங்களில் வேகமாக ஷேர் செய்தனர். நடிகர் சூரிக்கும் பலர் வாழ்த்துகளையும், கமெண்டுகளையும் பதிவு செய்திருந்தனர். ஆனால், இந்த பதிவு உண்மை இல்லை என்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தவெக மற்றும் விஜயை குறிவைத்து, சமூக வலைதளங்களில் இவ்வாறு அரசியல் உள்நோக்கத்துடன் தகவல் பகிரப்பட்டது தெரிய வந்தது.
இந்த பதிவிற்கு நடிகர் சூரி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை அவர் வெளியிட்டுள்ளார். அதில்,” தம்பி தவறான தகவலைப் பரப்புவது எப்போதும் சமூகத்துக்கு தீங்கையே தரும். ஆகையால் நம்முடைய ஒவ்வொரு செயலிலும் நிதானம் முதிர்ச்சியும் காட்டுவோம். இந்த சமூகம் நல்ல மாற்றங்களைப் பெற தகுதியானது. அதனால் நன்மையும், அன்பும் பரப்புவதில் உங்கள் சிறந்ததைச் செய்யுங்கள்.
எனக்குப பல வேலைகள் உள்ளன. உங்களுக்கும் செய்ய வேண்டியவை இருக்கின்றன. ஆகையால், இப்போது நம்முடைய பணிகளில் முழு கவனம் செத்துவோம்” என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து, இந்த பதிவை பதிவிட்ட நபர் அந்த எக்ஸ் தளப்பதிவை நீக்கிவிட்டார். ஆனால், அந்த, உண்மை தெரியாமல், பலரும் இந்த வதந்தியை தற்போதும் ஷேர் செய்து வருகின்றனர்.


