கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய், நாளை மறுநாள்(அக்டோபர் 27) மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் உள்ள வேலுச்சாமி புரத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 110 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூற தவெக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார்.
கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்திற்கு பிறகு விஜய், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்ற விமர்சனம் கடுமையாக எழுந்துள்ளது. கரூர் செல்வதற்கு பல்வேறு நிபந்தனைகளை விஜய் விதித்ததும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், இந்த எதிர்நிலை மனநிலையை மாற்றுவதற்கு விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களையும் நாளைமறுநாள் மாமல்லபுரத்தில் சந்திக்க விஜய் முடிவு செய்துள்ளார். கரூரில் இந்த சந்திப்பு நடத்த மண்டபம் கிடைக்காததால் இந்த நிகழ்வு அக்டோபர் 27-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது இதற்காக கரூரில் இருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரத்திற்கு அழைத்து வர தவெக முடிவு செய்துள்ளது. அங்கு வருபவர்களுக்கு தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி உதவி, நிதி உதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிகழ்வு குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.


