வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதால் மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக தேனி மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல சிற்றாறுகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் மூல வைகை ஆறாக வாலிப்பாறை தும்மக்குண்டு, முறுக்கோடை, வருசநாடு, கடமலைக்குண்டு, துரைச்சாமிபுரம், கண்டமனூர், அமச்சியாபுரம், குன்னூர் வழியாக வைகை அணையில் சேர்ந்தது.
மேலும் முல்லைப்பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறுகளிலும் நீர் வரத்து அதிகரித்ததால் வைகை அணையின் நீர்மட்டம் நேற்று 69 அடியாக உயர்ந்தது. இதனால் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் உபரியாக வெளியேற்றப்பட்டது. நேற்று மாலை நீர்மட்டம் 69.05 அடியாக இருந்தபோது 4738 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 69.13 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4875 கன அடி நீர் வருகிறது.
வைகை அணையில் இருந்து 3630 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5605 மி.கன அடியாக உள்ளது. இதன் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆற்றில் இறங்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என்றும், கால்நடைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். மேலும் அணைக்கு வரும் தண்ணீரின் அளவை பொறுத்து எப்போது வேண்டுமானாலும் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது என்பதால் அதிகாரிகள் 5 மாவட்ட ஆட்சியர்களுக்கும் இது குறித்து சுற்றறிக்கையை அனுப்பியுள்ளனர்.


