தீபாவளி பண்டிகையால் சென்னையில் காற்று மாசு கிடுகிடு உயர்வு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடியதால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தீபாவளி பண்டிகை  நேற்று (அக்.20)  உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலும் தீபாவளியை மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். புத்தாடை அணிந்து இனிப்புகள் பரிமாறி பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். சென்னையில் நேற்று முன்தினம் முதல் நேற்று இரவு வரை பட்டாசு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

இதன் காரணமாக இன்று காலை 6 மணி நிலவரப்படி சென்னையில் காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. சென்னையில் காற்று மாசு தரக்குறியீடு 154 ஆக சராசரியாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் 80 ஆக இருந்த நிலையில், கிடு கிடுவென உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக பெருங்குடியில் 217 ஆகவும், மணலியில் மற்றும் வேளச்சேரியில் 151, ஆலந்தூரில் 128, அரும்பாக்கத்தில் 145 ஆகவும் காற்று மாசு பதிவாகியிருந்தது. காற்று மாசு அதிகரித்தாலும், இது கடந்த ஆண்டு தீபாவளியுடன் ஒப்பிடுகையில் கணிசமாக குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2024-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது சென்னையில் அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 287 ஆக பதிவாகியிருந்தது. குறைந்தபட்சமாக திருவொற்றியூரில் 150 ஆக பதிவாகியிருந்தது. காற்று மாசு கடந்த ஆண்டு மிக மோசமாக பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு மிதமான அளவில் பதிவாகியுள்ளது. தீபாவளி பண்டிகையின் போது சென்னையில் இடைஇடையே கனமழை பெய்ததே காற்று மாசு குறைவுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.