இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு சபரிமலையில் இன்றும், நாளையும் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (அக்டோபர் 21) முதல் அக்டோபர் 24-ம் தேதி வரை கேரளாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். ஐப்பசி மாத பூஜையின் நிறைவு நாளான நாளை (அக்டோபர் 22) ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம் செய்கிறார். இதையொட்டி அவர் இன்று (அக்டோபர் 21) கேரளா மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு வருகை தருகிறார். இன்று இரவு கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர் நாளை காலை 9 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வருகிறார்.
அங்கிருந்து கார் மூலம் பம்பை வரும் அவர் இருமுடி கட்டி தேவஸ்தானத்தின் சிறப்பு வாகனம் மூலம் சன்னிதானம் செல்கிறார். அதனைத் தொடர்ந்து பகல் 12.30 மணியளவில் சாமி தரிசனம் செய்துவிட்டு சன்னிதானத்தில் ஓய்வெடுக்கிறார். பின்னர் வாகனம் மூலம் நிலக்கல் வந்து அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் வருகிறார்.
திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவனில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணனின் மார்பளவு சிலையை அக்டோபர் 23-ம் தேதி, திரவுபதி முர்மு திறந்து வைப்பார். பின்னர், வர்க்கலாவில் உள்ள சிவகிரி மடத்தில் ஸ்ரீ நாராயண குருவின் மகாசமாதி நூற்றாண்டு விழாவை அவர் தொடங்கி வைப்பார். பாளை, செயின்ட் தாமஸ் கல்லூரியின் வைரவிழா கொண்டாட்டங்களின் நிறைவு விழாவிலும் அவர் கலந்து கொள்வார். அக்டோபர் 24- ம் தேதி, எர்ணாகுளம் புனித தெரசா கல்லூரியின் நூற்றாண்டு கலந்து கொள்வார்.
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வருகையால் சபரிமலையில் இன்றும், நாளையும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


