வங்கக்கடலில் உருவாகும் தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் அக்டோபர் 24-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, தெற்கு கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக் கூடும் என்பதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது நாளை (அக்டோபர் 18) அன்று நீலகிரி, கோவை, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


