சட்டமன்ற தேர்தல் கூட்டணியை முன்னிட்டு பாமகவுடன் பாஜக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக கூட்டணி, பரப்புரை வேலைகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியா கூட்டணியில் உள்ள திமுக கூட்டணியை எதிர்த்து அதிமுக இந்த முறை பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கிறது. இதன் காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளை இந்த கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயற்சி எடுத்து வருகிறது.
இந்த நிலையில், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசை, பனையூரில் உள்ள இல்லத்தில் பாஜகவின் தேசிய துணைத்தலைவரும், தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளருமான வைஜயந்த் பாண்டா எம்.பி. சந்தித்துப் பேசினார். அப்போது அவர், டாக்டர் அன்புமணி ராமதாசிடம் சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசியதாகத் தெரிகிறது.
அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை அன்புமணி தனது முகநூலில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பேசி வரும் நிலையில், அவரது மகன் அன்புமணி பாஜக கூட்டணியில் சேர முயற்சி செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


