April 15, 2026

பரபரப்பு…நடிகர் ரஜினிகாந்துடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு!

நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென சென்றுள்ளார். அவருடன் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தும் சென்றுள்ளார். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த கருத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால், செங்கோட்டையனின் பதவியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்தார். ஏற்கெனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம் திரிசங்கு சொர்க்கத்தில் உள்ளார்.

இந்த நிலையில், திடீரென ரஜினிகாந்தை அவரது மகனுடன் ரகசியமாக எதற்கு சந்தித்து பேசினார் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. ஆனால், மரியாதை நிமித்தமாக ரஜினியைச் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்ததாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான புகைப்படங்களை ஓ.பி.ரவீந்திரநாத் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில்” இன்று உலகமெங்கும் உள்ள மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்ற தமிழ்த் திரையுலகின் பெருமைமிகு நாயகன், பத்மவிபூஷண், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்தை தமிழக முன்னாள் முதலமைச்சரும், கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் உடன் இணைந்து, மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, எனது தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, ஆசி பெற்றேன்” என பதிவிட்டுள்ளார்.