தனிக்கட்சியைத் தொடங்குவது தான் அன்புமணிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் நல்லது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் பாமக நிறுவனர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,” ஒரு பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் நானே சேர்ந்தேன். 12 ஆண்டுக்கு முன் எனக்கு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அந்த ரத்தக்குழாய்கள் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக, மருத்துவர்களிடம் பரிசோதிக்க சொன்னேன். மறுநாளே நான் வீடு திரும்பி விட்டேன்.
நான் ஐசியூவில் சிகிச்சை பெறவில்லை. ஆனால், நான் ஒரு மணிநேரம் ஐசியூவில் இருந்ததாகவும், அதன்பிறகு, அறைக்கு வந்துவிடுவார் என்று மருத்துவர்களிடம் பேசிய போது, அவர்கள் கூறியதாக அன்புமணி கூறியிருக்கிறார். ‘மருத்துவர் ஐயா நல்லா இருக்கிறார். மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றிருக்கிறார். இது திட்டமிட்டது தான். ஒரு வாரத்திற்கு முன் இதனை உறுதிப்படுத்திக் கொண்டு, பரிசோதனை செய்து நல்லா இருக்கிறார். ஆனால், அவருடன் இருக்கும் சில பேர், ஐயாவுக்கு உடல்நிலை சரியில்லை, வந்து பாருங்க என்று சொல்வதெல்லாம் அசிங்கமாக இருக்கிறது. ஐயாவுக்கு ஏதாவது ஆச்சுனால் தொலைத்து போடுவேன். சும்மா இருக்க மாட்டேன். வேடிக்கை பார்க்க மாட்டேன். ஐயாவை வைத்து நாடகமாடிட்டு இருக்காணுங்க,’ என்று எல்லாம் அன்புமணி பேசினார்.
படிக்காத மாடு மேய்க்கும் சிறுவன் கூட இப்படிபட்ட சொற்களை பேசியிருக்க மாட்டார். அதனால் தான் நிர்வாகக் குழுவில் அன்புமணிக்கு தலைமைப்பண்பு இல்லை என்றேன். நோய் தொற்றும் அளவுக்கு நான் வியாதியில் இல்லை. பாமகவை தோற்றுவித்தது, அதன் உரிமையாளர் நான் தான். இப்போது, அதே கட்சி மற்றும் அதே கொடியை வைத்து தன்னுடைய கட்சி என்று சொல்வது நியாயமில்லை. இதனை தேர்தல் ஆணையம், நீதிமன்றத்தில் சந்திப்போம். இப்படி எல்லாம் நடக்கும் என்று எனக்கு தெரியாது. பாமகவுக்கும், அன்புமணிக்கும் எந்த சம்பந்தமில்லை.
ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின் பேரில் அன்புமணி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். அன்புமணி ஒரு தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள். அது உனக்கும் நல்லது, உன்னை சுத்தியிருக்கும் அந்தக் கூட்டத்திற்கும் நல்லது. பொறுப்பு மட்டும் தான் கிடைக்கும். எம்எல்ஏ, எம்பி பதவி எல்லாம் கிடைக்காது. அதனை ஒரு போலியான அமைப்பாகத்தான் மக்கள் பார்ப்பார்கள்.
என்னுடைய வளர்ப்பு சரியாக இருக்கிறது என்று நிருபிக்க வேண்டுமானால், ஒரு வாரத்திற்குள் 21 பேர் சேர்ந்து ஒரு கட்சியை ஆரம்பித்துக் கொள்ளலாம். ரொம்ப பிரமாதமாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கும் அந்தக் கட்சி. இதுவரை 8 மாதத்தில் தனிக்கட்சி தொடங்குமாறு மூன்று முறை சொல்லி விட்டேன். இனிமேல், என்பெயரைப் படுத்தக் கூடாது. இனிஷியல் வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம்” என்று கூறினார்.


